சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைக் கேள்வி எழுப்பிய நபரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் இயங்கி வந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், மது குடிப்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்ததைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், இந்த மகிழ்ச்சி மக்களுக்கு நீண்ட நாட்கள் தொடரவில்லை.
அருகிலுள்ள ஏர்வாடி, திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கீழக்கரை பேருந்து நிலையப் பகுதியில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதைச் சிலர் தொழிலாகச் செய்யத் தொடங்கினர். இதனால் இப்பகுதியில் மது விற்பவர்கள், மது அருந்துபவர்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்தது. இதுகுறித்து கீழக்கரை காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் அரசியல் அழுத்தத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
சட்ட விரோத மது விற்பனையின் உச்சமாகக் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு உணவகத்தில் 24 மணி நேரமும் தட்டுப்பாடில்லாமல் மது விற்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். சில நாட்களுக்கு முன் கீழக்கரையிலுள்ள சமூக அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து உணவகத்தில் மது விற்பனை நடப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்த சட்ட விரோத மது விற்பனை செய்யும் உணவகக்காரர்கள் அவரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் தங்களைத் தாக்கியதாகச் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்திற்கு அங்குத் தோண்டப்படும் மணலையே பயன்படுத்தி முறைகேடு செய்வதாகப் பிரபாகரன் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் ஏற்கனவே வெளியிட்டதற்கும், கீழக்கரை நகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் மீது உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நகராட்சி ஆணையர் கொடுத்த புகார் குறித்து நகராட்சித் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் கவனத்துக்கே தெரியாமல் ஆளும்கட்சியின் மாவட்டப் புள்ளி ஒருவரின் அழுத்தத்தினால் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரும் கீழக்கரை பகுதியில் சட்டவிரோத மது விற்பனை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீதும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பிய பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கீழக்கரை பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீழக்கரை காவல்துறை எஸ்.ஐ சல்மோனிடம் பேசியபோது, “சட்ட விரோத மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி சட்ட விரோதமாக கீழக்கரையில் யாரும் மது விற்க முடியாது. பிரபாகரன் என்பவர் சிலரை மிரட்டி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றபடி வேறு எந்த காரணமும் அல்ல, பிரபாகரன் மீது ஆரம்பத்தில் இதுபோன்ற இல்லீகல் ஆக்டிவிட்டியில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளது. அரசு மருத்துவமனை கட்டுவது குறித்து புகார் எழுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக நகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கீழக்கரையை மதுக்கரையாக்கும் சட்ட விரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.