திருவனந்தபுரம்: கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு கேரள அரசு சார்பில் மாதம் ரூ.1,600 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில நிதித் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகி உள்ளன. இதுகுறித்து கேரள நிதித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவின் கோட்டக்கல் பகுதியில் 42 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பயனாளி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். ஆனால் அவரது பெயரில் ஓய்வூதியத் தொகை தொடர்ந்து பெறப்படுகிறது.
பிஎம்டபிள்யூ சொகுசு கார் வைத்திருப்போர், ஆடம்பர மாளிகையில் வாழ்வோரும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். 1,458 அரசு ஊழியர்களும் முறைகேடாக ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளனர். இவ்வாறு கேரள நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.