ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே மரக்காணம் அருகில் நேற்று (நவ.30) இரவு 11.30 மணியளவில் கரையைக் கடந்தது.
இதனால், சென்னை, திருவள்ளூர், மாமல்லபுரம், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் வட கடலோரப் பகுதிகளில் பலத்தக் காற்றுடன் அதிகனமழை பெய்து வந்தது. இந்த சீரற்ற வானிலைக் காரணமாக சிங்கப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று (நவ.30) மதியம் 12.20 மணிக்கு மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று சீரற்ற வானிலை மற்றும் பலத்தக் காற்றால் தரையிறங்க முடியாமல் தவித்து பிறகு, கட்டிடத்திற்கு மிக அருகே சென்று காற்றில் அலைமோதி சென்னை விமான வழித்தடத்தில் இடது, வலது என சக்கரத்தை பதித்து, உடனே மீண்டும் வானத்தில் பாதுகாப்பாகப் பறந்து திரும்பியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
நெட்டிசன்கள் பலரும் பதைபதைப்புடன் இந்தக் காணொலியை வைரலாக்கினர். ஆபத்து சூழ்ந்த சமயத்திலும் லாவகமாக விமானத்தைக் கையாண்ட விமானியைப் பலரும் பாராட்டினர். அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் பயணித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விமானியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
தற்போது இது குறித்து இண்டிகோ நிறுவனம், “நவம்பர் 30ம் தேதி மும்பையிலிருந்து சென்னை வந்த ‘flight 6E 683’ விமானம் புயலால் ஏற்பட்ட ஆபத்தான வானிலையைக் காரணமாகத் தடுமாறியது. விமான நிலையம் அளித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையால் பாதுகாப்பாக இயக்கப்பட்டது. எங்கள் இண்டிகோ விமானிகள் கைதேர்ந்தவர்கள். விமானத்தைப் பாதுகாப்பாகவும், திறமையாகவும் கையாண்ட விமானிக்குப் பாராட்டுகள்” என்று பதிவிட்டிருக்கிறது.