டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: பாமக, அமமுக விமர்சனம்

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புமணி: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மத்திய சுரங்கத்துறை வெளியிட்ட விவரங்களில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏல நடவடிக்கை தொடங்கிய பிப்ரவரி மாதத்தில் இருந்து நவ.7 வரை தமிழக அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு கடந்த ஆண்டே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முன்வரவேண்டும்.

டிடிவி தினகரன்: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், சுரங்கம் ஏலம் விடுவதற்கு முன்பாக மாநில அரசிடம் கேட்கப்பட்ட கருத்தின்போது எவ்வித எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியிருப்பது, திமுகவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவதுடன், சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.