தி.மலை மாவட்டத்தையும் திணறிடித்த ஃபெஞ்சல் புயல் – மழை, வெள்ளத்தில் மக்கள் அவதி

புதுச்சேரி, விழுப்புரம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் வரை மிதமான மழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கியபோது, மழை கொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழையின் தாக்கம் தீவிரமானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையிலிருந்து வழிந்தோடும் தண்ணீரால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பே கோபுரம் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மத்திய பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. வேங்கிகால் ஏரியிலிருந்து வெள்ளநீர் வெளியேறியதால் ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து வெள்ள நீர் சூழ்ந்தது. சமுத்திரம் அருகே சொர்ண பூமி நகரில் மழை நீர் சூழ்ந்ததால் குடியிருப்புகளிலிருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நொச்சிமலை பகுதியில் வெள்ள நீரால் வீடுகளில் சிக்கித் தவித்த 13 பேரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மகா தீபம் ஏற்றப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் கிரிவலப் பாதையை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மேலும் சுரங்கப் பாதைகள் மூழ்கின. ஆரணி அருகே சேவூர் பகுதியில் 4 மாடுகள் உயிரிழந்தன.

மேலும் சம்பா அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை மழை நீர் மூழ்கடித்துள்ளது. மழைநீர் வடியப் பல நாட்களாகும் என்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பூக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சந்தவாசல், படைவீடு மற்றும் சுற்றுப் பகுதியிலிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, வெம்பாக்கம், செங்கம், சேத்துப்பட்டு, கீழ்பென்னத்தூர், தண்டராம்பட்டு வட்டங்களில் மழை வெளுத்துக் கட்டியது. சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், சாலைகள் சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர். பல நூறு வீடுகளில் மழை நீர் புகுந்துவிட்டது. ஜவ்வாதுமலையில் பெய்து வரும் மழையால் செய்யாறு, கமண்டல நாக நதி, மஞ்சலாறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் போதியளவு கிடைக்கவில்லை. மழையால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகப் பால் வியாபாரிகள் கூறுகின்றனர். நகரப் பகுதியில் ஓரளவு மின்சாரம் இருந்தாலும், கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

சேத்துப்பட்டில் 22 செ.மீ. மழை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 15 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாகச் சேத்துப்பட்டு பகுதியில் 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் ஜவ்வாதுமலையில் 21.4, கீழ்பென்னாத்தூரில் 20, திருவண்ணாமலையில் 7.5, செங்கத்தில் 9, போளூரில் 7, கலசப்பாக்கத்தில் 16, தண்டராம்பட்டில் 15.5, ஆரணியில் 18, செய்யாறில் 14.4, வந்தவாசியில் 16.3, வெம்பாக்கத்தில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு: புயலின் தாக்கம் தீவிரமடைந்து அதிக கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.