புதுச்சேரி: புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் ஆய்வை முதல்வர் ரங்கசாமி இன்று மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செமீ அளவுக்கு பெய்த மழையே அதிகமான மழைப்பதிவாக இருந்தது. தற்போது 50 செ.மீ மழை பதவாகியுள்ளது. கடல் சீற்றம் இருப்பதால் நீர் உள்வாங்கவில்லை. அதனால் வாய்க்காலில் நீர் நிரம்பி நகரில் பாய்ந்துள்ளது. மழை விட்டால் தண்ணீர் வடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர் உட்பட பல தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசிடம் உதவி கேட்போம். புதுச்சேரியில் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.
விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும். புயலால் உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் தரப்படும். அனைத்து துறைகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.