மகாராஷ்டிராவில் டிசம்பர் 5-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 280 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக 132, ஷிண்டே அணி 57, அஜித் பவார் அணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அன்றைய தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியபோது, “3 கட்சிகளும் கலந்தாலோசித்து புதிய முதல்வரை தேர்வு செய்வோம்” என்று தெரிவித்தனர்.
மகாராஷ்டிர அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம்பெற முடியும். 7 எம்எல்ஏக்களுக்கு ஓர் அமைச்சர் பதவி என்ற வகையில் அமைச்சர்களை நியமிக்க பாஜக கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு 22-24, ஷிண்டே அணிக்கு 10-12, அஜித் பவார் அணிக்கு 8-10 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் துணை முதல்வராக இருந்தபோது உள்துறை அவர் வசம் இருந்தது.
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தலைமை உறுதி அளித்துள்ளது. இந்த சூழலில் உள்துறையை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டே வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பட்னாவிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உள்துறையை தனது வசம் வைத்திருக்க அவர் விரும்புகிறார்.
இதன்காரணமாகவே மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. மகாயுதி கூட்டணியின் ஆலோசனை கூட்டங்களை ஷிண்டே தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கடந்த 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.
புதிய அமைச்சரவையில் உள்துறையை வழங்கவில்லை என்றால் பாஜக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று ஷிண்டே அணி நிர்பந்தம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஷிண்டேவை சமாதானம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏக்நாத் ஷிண்டே தற்போது சொந்த கிராமமான சாத்தாராவில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். உடல்நல பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் அஜித் பவார் நேற்று கூறும்போது, “பாஜகவை சேர்ந்த தலைவர் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்பார்” என்று தெரிவித்தார். அவரது கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “டிசம்பர் 5-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும்” என்று தெரிவித்தன.
புதிய அரசு பதவியேற்பது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: டிசம்பர் 3-ம் தேதி மும்பையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இதில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிவார்கள். இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.
ஷிண்டே அணி, அஜித் பவார் அணியில் இருந்து தலா ஒரு துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவர். இதை அந்த கட்சிகளின் தலைமை முடிவு செய்யும். டிசம்பர் 5-ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறும். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.