இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த 4 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. அம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் போலீஸார் நேற்று கூறியதாவது: சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக மக்கள் போர்ப்படையை சேர்ந்த 4 தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சாகித் கான் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மைபம் சூரஜ் கான், மற்றும் ஷ்யாம் சந்திர சிங் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல் துறையின் மற்றொரு நடவடிக்கையில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருந்த ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சங்கோம் சும்பம் கைது செய்யப்பட்டார். மேலும் அதே நாளில் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்மோங்பி ரிட்ஜ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர்.
பல்வேறு வகை துப்பாக்கிகள், இரண்டு கையெறிகுண்டுகள், இரண்டு டெட்டனேட்டர்கள், 16 தோட்டாக்கள் மற்றும் மூன்று கண்ணீர் புகைக்குண்டுகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்ன. இவ்வாறு போலீஸார் கூறினர்.