முடிவுக்கும் வரும் பதவிகள்; எப்போது உள்ளாட்சித் தேர்தல்? ஆளும் தரப்பின் முடிவு என்ன?

தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., தே.மு.தி.க., பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிடமும் தற்போது பெரும் விவாதமாக எழும்பியிருக்கும் விவகாரம், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்?” என்பதுதான்.

வரும் ஜனவரி மாதத்துடன் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பதவிக்காலம் முடிகிறது. எனவே, அதற்கான தேர்தலை இப்போதைக்கெல்லாம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. ஆளும் தி.மு.க அரசும் அதற்கான முயற்சிகளில் இறங்கியதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, ‘உள்ளாட்சி ஜனநாயகம்’, ‘உள்ளாட்சி நிதி’ என தடால் புடால் அரசியல் செய்த தி.மு.க., ஆளுங்கட்சியான பிறகு, 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அமைதிகாப்பது, பலத்த விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. இதனால், வரும் சட்டமன்றக் கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடலாமா என்ற ஆலோசனை கோட்டையில் தடதடக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்…

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா, ஏன் தாமதமாகிறது என்பது உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து சீனியர் அமைச்சர்களிடம் பேசினோம்…

“2019-ல், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.” எனப் பேசத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர், மேலும் தொடர்ந்தவர், “அங்கேயெல்லாம் ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் என 91,975 பதவியிடங்களுக்கு நடத்தப்பட்ட அந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி 55 சதவிகித இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி 45 சதவிகித இடங்களிலும் வெற்றிப்பெற்றன. மீதிமிருந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலோடு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தினர். பெரும்பாலான இடங்களில் தி.மு.க கூட்டணியே வெற்றியை பெற்றது. இப்போது விவகாரமே, 2019-ல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானதுதான். அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுங்கப்பட்ட 91,975 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் ஜனவரி 2025 உடன் முடிவுக்கு வருகிறது.

மாநிலத் தேர்தல் ஆணையம்

இந்நேரத்திற்கெல்லாம், காலியாகும் பதவியிடங்களை நிரப்புவதற்கு, உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாநில அரசும் செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போதுவரை அதற்கான எந்த முயற்சியும்” எடுக்கவில்லை என்றார்.

ஒட்டுமொத்தமாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு மொத்தமாகத் தேர்தல் நடத்தலாமா அல்லது பதவி காலியாகும் மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தலாமா என்ற யோசனை தலைமையிடம் இருக்கிறது. ஆனால், எது எப்படியோ வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு, ஜனவரி முதல் வாரத்தில் தேர்தலை நடத்தலாம் என்ற யோசனையும் இருக்கிறது. அப்படித் தேர்தல் அறிவித்தால், இப்போதுதான் வாக்காளர் சரிபார்ப்பு நடைபெற்றது. இன்னும் வாக்காளர் பட்டியல் வெளியிட வில்லை. சில பகுதிகளை மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுடன் இணைக்கும் வேலையும் நடந்து வருகிறது. புதிதாக மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை வரையறை செய்ய வேண்டிய பணிகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலை ஆளுந்தரப்பு நடத்துமா என்ற சந்தேகமும் இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

எனவே, அதிகாரிகள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளைச் செயல்படுத்திவிட்டு, தேர்தலைத் தள்ளி வைக்கலாமா என்ற யோசனையும் தலைமையிடம் இருக்கிறது. எது எப்படியோ என்னவாக இருந்தால் அதுகுறித்த அறிவிப்பு டிசம்பர் 9ம் தேதி கூடும் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.