IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்

IND vs AUS 2nd Test Updates : பார்டர் கவாஸ்கர் டிராபியில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்கிறது. பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடக்கும் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இப்போட்டியில் களமிறங்குகிறார். அதேபோல் காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுகிறார். அதனால், பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய துருவ் ஜூரல், பதட்டமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார்கள். 

இன்னொரு மாற்றமும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா நடக்கப்போகும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அவர் அணிக்குள் வரும்பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்படுவார். இந்த மூன்று மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் பேட்டிங் ஆர்டரிலும் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. ரோகித் சர்மா அணிக்குள் வந்துவிட்டதால் அவர் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஓப்பனிங் இறங்குவார். அதனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கேஎல் ராகுல் 6வது இடத்தில் பேட்டிங் செய்யப்போகிறார். மூன்றாவது விக்கெட்டுக்கு சுப்மன் கில், அடுத்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள். அவர்களுக்குப் பிறகு கேஎல் ராகுல் விளையாடுவார். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கேஎல் ராகுல் பெர்த் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் தரமான பேட்டிங் ஆடியதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

பிங்க் பால் டெஸ்ட் ரெக்கார்டு

பிங்க் நிற பந்தில் இந்திய அணி இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் மூன்று போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் படுதோல்வியையும் சந்தித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி இதே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் மிக குறைந்த டெஸ்ட் ஸ்கோர் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோராகவும் இதுபதிவானது. அந்த மோசமான சாதனையை எதிர்வரும் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம் மற்றும் நேரலை ஒளிபரப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் நேரலையாக இந்த டெஸ்ட் போட்டியை கண்டு ரசிக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.