சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் ஏஐ குறித்த ‘உமாஜின்’ மாநாடு: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் 2023’ என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடத்தபப்ட்டது. அதைத்தொடர்ந்து ‘உமாஜின் 2024’ நடப்பாண்டில் நடைபெற்று, பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்றாம் முறையாக ‘உமாஜின் 2025’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளியிட்ட பதிவில்: “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற முதல்வர் ஸ்டாலினின் இலக்கை நோக்கி தமிழகத்தை தயார்ப்படுத்த, உலக அவிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கொள்ளை வகுப்பாளர்கள், முன்னணி தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் ‘உமாஜின்’ தொழில்நுட்ப மாநாடு ஒன்றிணைத்து வருகிறது. ‘உமாஜின்’ மாநாட்டின் கடந்த பதிப்பானது மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

2024-ல் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குபெற 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 163 பேச்சாளர்கள் கலந்து கொண்டு 60 வெவ்வேறு அமர்வுகளில் உரையாற்றினர். அதன் தொடர்ச்சியாக ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் மூலம் சமமான வளர்ச்சியை இயக்குதல்’ என்ற கருப்பொருளில் ‘உமாஜின் சென்னை 2025’ தொழில்நுட்ப மாநாடு வரும் 2025 ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடானது செயற்கை நுண்ணறிவு மூலம் அனைத்து துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. நிலையான கண்டுபிடிப்புகளுக்காக தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை ஒன்றிணைத்து செயல்பட வாய்ப்புகளை வழங்குகிறது. பொதுக் கொள்கை, நிலைத் தன்மை, பொருளாதார மாற்றம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் சம பங்களிப்பை உறுதிபடுத்தும் இந்த மாநாடு தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.