சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்: ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும், தொடர்ந்து. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்தது. டிசம்பர் 1-ம் தேதி புயல் கரையை கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியதால் சாலைகள், மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.50 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 50 செ.மீ.க்கு மேல் ஒரே நாளில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக உள்கட்டமைப்பு, பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, க.தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க. தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளது.
12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள். 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு. 2.11 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு விவசாய, தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. எனவே, பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்துக்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிப்பு களின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.
மேலும், விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். மத்திய குழு ஆய்வு அடிப்படையில், தேவைப்படும் கூடுதல் நிதியை வழங்க வேண்டும். தமிழகம் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு. இயல்பு நிலையை விரைவில் எட்ட, தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் பிரதமரின் ஆதரவு. சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.