திருவண்ணாமலை: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அனுதாபங்கள்; அரசுக்கு கோரிக்கை – விஜய் சொன்னதென்ன?

திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் மண் சரிவின் காரணமாக இடிபாடுகளில் சிக்கிய ஏழு பேரில் குழந்தை உட்பட ஐந்து பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மற்றவர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன.

இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் விதமாகவும் அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வலியுறுத்தியும் சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

அவரது பதிவு, “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

திருவண்ணாமலை மண் சரிவு

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

“தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.