திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டபாளைத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமேலு. இவர்களின் மகன் செந்தில்குமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தந்தை, தாயை அழைத்துச் செல்ல செந்தில்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு சேமலைக்கவுண்டன்பாளையத்துக்கு வந்துள்ளார். பின்னர் 29-ம் தேதி காலை தோட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் பார்த்தபோது, தெய்வசிகாமணி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வெளியே உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தெய்வசிகாமணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் தெய்வசிகாமணியின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தக் கொடூரக் கொலை திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தக் கொலையைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கொங்கு தேச மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கொலையுண்டவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர்.
கொலை நடைபெற்று நான்கு நாள்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை கைது செய்யப்படாத நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சேமலைக்கவுண்டன்பாளையத்துக்குச் சென்று கொலையான செந்தில்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பேசிய உறவினர்கள்.”எந்த சம்பந்தமும் இல்லாமல் மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு தமிழக அரசு தான் முழுக்க முழுக்க காரணம். எங்கள் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அந்த வலி உங்களுக்குப் புரியும். கொலை நடந்து 4 நாள்களுக்கு மேலாகிறது. இதுவரை கொலையாளிகளைப் பிடிக்கவில்லை. அவர்களைப் பிடித்து கடுமையான தண்டனை தர வேண்டும்.
தோட்டத்து வீட்டில் வசிக்கும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். அருகே அவிநாசிபாளையத்தில் காவல் நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமரா பொருத்தவில்லை’ என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாசன், ” போலீஸ் 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” என மு.பெ.சாமிநாதன் கூறிவிட்டுச் சென்றார். கொலையானவர்களின் உறவினர்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கேள்வி கேட்கும் வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.