மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுவார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தற்போது மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் பதவி வகிக்கின்றனர். இந்த சூழலில், புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஷிண்டே தரப்பு ஆட்சேபம் தெரிவித்ததால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தனது சொந்த கிராமமான சாத்தாராவில் முகாமிட்டார். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பட்னாவிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்நிலையில், சாத்தாராவில் செய்தியாளர்களிடம் ஷிண்டே நேற்று கூறியதாவது: முதல்வராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பதவி வகிக்கிறேன். ஒருநாள்கூட விடுமுறை எடுத்தது கிடையாது. எனது தலைமையில் தேர்தலை சந்தித்தோம். இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரச்சாரத்துக்காக கடினமாக உழைத்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஓய்வெடுப்பதற்காக சாத்தாராவுக்கு வந்துள்ளேன்.
பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து, புதிய முதல்வரை முடிவு செய்வார்கள். புதிய முதல்வர் டிசம்பர் 2-ம் தேதி (இன்று) தேர்வு செய்யப்படுவார். அவருக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் கூறும்போது, “பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் டிசம்பர் 3-ம் தேதி (நாளை) நடைபெறும். இதில் புதிய முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். பதவியேற்பு விழா 5-ம் தேதி நடைபெறும். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள்” என்றார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.