நீங்கள் நீண்ட நேரம் மொபைலில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தொடர்புடைய வார்த்தையைத்தான் 2024ஆம் ஆண்டுக்கான Word of the Year ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்.
சமூக வலைத்தளங்களில் புழங்கும் சொற்கள் தொடர்ந்து Word of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு Rizz, அதற்கு முந்தைய ஆண்டு Goblin Mode போன்ற சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு Brain rot என்ற சொல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Brain rot
இந்த வார்த்தை ஒருவரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமாதலைக் குறிக்கிறது. குறிப்பாக அற்பமான எவ்வித உள்ளீடுமற்ற கன்டென்ட்களைத் தொடர்ந்து பார்ப்பதன் விளைவாக அறிவுநிலை தாழ்ந்து போவதைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தை பயன்படுகிறது. ஆன்லைனில் நீண்ட நேரம் எவ்வித நோக்கமும் இல்லாத வீடியோக்களை பார்ப்பதை இதனுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.
Rot என்ற வார்த்தைக்கு அழுகல் என்று பொருள். இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள ஆக்ஸ்ஃபோர்ட் வெளியிட்ட புகைப்படத்தில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) உள்ள குறியீட்டைப் பார்க்கவும்.
ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரி இதற்கு, “the supposed deterioration of a person’s mental or intellectual state, especially viewed as the result of overconsumption of material (now particularly online content) considered to be trivial or unchallenging” என விளக்கமளிக்கிறது.
உங்கள் மூளையைச் சீரழிவு நிலைக்குக் கொண்டுசெல்லும் எதையும் இந்த வார்த்தையுடன் தொடர்புப்படுத்தலாம்.
Brain rot என்ற வார்த்தை 1854ஆம் ஆண்டு அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தோரோ என்பவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆன்லைன் உலகில் அது வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
2023-24 ஆண்டுகளில் இந்த வார்த்தையின் பயன்பாடு 230% அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது. குறிப்பாக ஆன்லைனில் அதிகநேரம் வீடியோக்கள் பார்ப்பதனால் ஏற்படும் தீங்குகளைப் பற்றி பேசும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெய்நிகர் வாழ்க்கையின் (virtual Life) ஆபத்தை விளக்கும் வார்த்தையாக Brain rot இருக்கிறது. நாம் நமது நேரத்தை எவ்வளவு வீணாகச் செலவழிக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்த இந்த வார்த்தை பயன்படுகிறது எனக் கூறியுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் word of the Year ஆக தேர்ந்தெடுக்க பரிசீலிக்கப்பட்ட பிற வார்த்தைகள்,
Demure : தோற்றத்தில் அல்லது பண்பில் அடக்கமான அல்லது கட்டுப்பாடான நபர்.
Dynamic pricing : சந்தை நிலைமையைப் பொருத்து விலை மதிப்பு மாறுபடுதல். குறிப்பாக தேவை அதிகரிக்கும் நேரத்தில் விலை அதிகரித்தல்.
Lore : அறிவுசார்ந்ததாக கருதப்படும் உண்மைகள், பின்னணி தகவல்கள் மற்றும் வாய்மொழிக் கதைகள்.
Romantasy : ரொமான்ஸ் மற்றும் ஃபேண்டஸி கலந்து உருவாக்கப்படும் கதைகள்.
Slop : ஆன்லைனில் பகிரப்படும், ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவான எழுத்து, ஓவியம் மற்றும் பிற கலை வடிவங்கள் மோசமானதாக அல்ல துல்லியமற்றதாக இருந்தால் அவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…