Doctor Vikatan: நகரங்களில் இன்று நிறைய இடங்களில் பருத்திப்பால் கிடைக்கிறது. அது ஆரோக்கியமானது என்கிறார்கள். பருத்திப்பால் உண்மையிலேயே நல்லதா… எல்லோரும் எடுத்துக் கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பருத்திப்பால் என்பது உண்மையில் ஆரோக்கியமான பானம்தான். அதற்கு நிறைய மருத்துவ பலன்கள் உள்ளன. குறிப்பாக, மலமிளக்கியாகச் செயல்படும் தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு.
இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் தவறான உணவுப்பழக்கம் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. அதற்கு பருத்திப்பால் நல்ல தீர்வளிக்கும். கோழையை அகற்றும் தன்மையும் பருத்திப்பாலுக்கு உண்டு என்று சித்த மருத்துவம் சொல்கிறது. எனவே, சளி, இருமல் பிரச்னை உள்ளவர்கள் பருத்திப்பால் குடிக்கலாம்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் பருத்திப்பாலுக்கு உண்டு. பருத்திப்பாலில் பெரும்பாலும் பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்தே தயாரிப்பதால், இரும்புச்சத்தும் கிடைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
உடலுக்கு உடனடி தெம்பை அளிக்கக்கூடியது பருத்திப்பால். குறிப்பாக, நோயிலிருந்து மீண்டவர்களுக்கு இது நல்ல தெம்பளிக்கும். நோய் வாய்ப்பட்டு குணமானவர்களுக்கும், உடல்சோர்வாக உணர்பவர்களுக்கும் பருத்திப்பாலை ஊட்ட பானமாகவே கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் பருத்திப்பால் விற்பனை பல காலமாக நடக்கிறது. பருத்திப்பால் குடிக்கும்போது அது உண்மையிலேயே பருத்தி விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதா அல்லது செயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். தரமாகத் தயாரிக்கப்பட்டதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
அனைத்து வயதினரும் பருத்திப்பால் எடுத்துக்கொள்ளலாம். 5 வயதுக்கு மேலான குழந்தைகளுக்குக் கூட அரை டம்ளர் அளவுக்கு பருத்திப்பால் தரலாம். ஆண்மையை அதிகரிக்கும் தன்மை கொண்டதால் ஆண்களுக்கும் இது மிகவும் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.