ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகியன வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்வாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மக்காச்சோளம் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 2 நாட்கள் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நெற்பயிர்கள், பணப்பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பயிர்ச்சேதம், பொருட்சேதம் உள்ளிட்ட இழப்புகளுக்கான நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தால், புயலால் சேதமடைந்துள்ள அணைகள், சாலைகள், பாலங்கள், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். புயல், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து ஆய்வை மேற்கொள்வதோடு பயிர் இழப்பு மற்றும் பொருட்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க வேண்டும். மத்திய அரசு, அதிகாரிகள் குழுவை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்து, தமிழக அரசு கோரும் நிதியை உடனடியாக அளித்திட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டெல்டா மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லது முக்கிய இடங்களில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய பயிர் இழப்பீடு, நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.