“அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சுதான் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்” – வானதி

கோவை: மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள், காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா எனக்கூறி அமைச்சர் மீது சேற்றை வீசியுள்ளனர்.

எதிர்பாராத விதமாக அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நிர்வாகத் திறனற்ற மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் செயலற்ற தன்மையால் பெருமழை பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்கு சென்று படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இதனால் திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு. கடந்த மூன்றரை ஆண்டுகால திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு.

இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டு பேசும் மகாராஜா மனப்பான்மையிலிருந்து திமுக அமைச்சர்கள் வெளியே வர வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம் வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.