உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யச் சென்ற போது அதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட, காவல்துறையினருக்கும் போட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட… அது வன்முறையாக வெடித்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜியாவுர் ரஹ்மான் பார்க் (Zia Ur Rehman Barq) விகடனிடம் பிரத்தியேகமாக பேசியுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பேச வேண்டும் என்பதுதான் நாங்கள் முதலில் இருந்தே கேட்டு வருகிறோம். எங்கள் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் ஒத்திவைப்பு நோட்டீஸை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். நாடாளுமன்றத்தின் வாயிலாக இந்த விவகாரம் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். தினமும் காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றம் தொடங்கும் போது இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என நம்பி வருவோம். ஆனால் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இல்லை.
கடந்த 10 நாட்களாக இதே தான் நடக்கிறது. விவாதம் கோரினால் அவை ஒத்திவைக்கப்படுகிறது. மக்களவை சபாநாயகரிடமும் தனியாக கோரிக்கை வைத்தும், எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எப்போது விவாதம் நடந்தாலும் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அவை நடக்க வேண்டும். சம்பல் விவகாரம் தேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ஆனால் அதை பற்றி பேசாமல் மத்திய அரசு ஏன் ஓடி ஒளிகிறது என எங்களுக்கு புரியவில்லை.பேச்சுவார்த்தை நடந்தால் தான் நல்லது. அதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.”
“இந்த விவகாரத்தில் எனது கட்சி எனக்கு முழு ஆதரவை கொடுக்கிறது. எங்களுக்கு இதில் எல்லோருடைய ஆதரவும் தேவை. இறைவன் அருளால் மற்ற கட்சிகளும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது அதி முக்கியமான விஷயம். இங்கு அமைதியும் சகோதரத்துவமும் மிக மிக முக்கியம். தற்போது நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதில் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் ஆதரவும் தேவை. கட்சி பேதம் கடந்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சம்பலில் நடந்த இது போன்ற வேண்டாத நிகழ்வுகள் நாட்டின் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.”
“முதலில் அயோத்தியில் இருந்த மசூதியை தோண்டினார்கள். பிறகு வாரணாசி, மதுரா, அஜ்மீர் மசூதிகளை தொடர்ந்து தற்போது சம்பல் ஜமா மசூதியையும் தோண்ட முற்படுகிறார்கள். இப்படியே தோண்டிக்கொண்டே இருந்தால் எப்போது தான் இவர்கள் இதனை நிறுத்துவார்கள். ஆய்வு நடத்துவது தான் நோக்கம் என கூறுகிறார்கள். எங்கள் கேள்வி, ஏன் இங்கே தான் ஆய்வு நடத்த வேண்டுமா? ஏன் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விஷயங்களிலேயே இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்? மக்களிடம் பதற்றத்தை கொடுக்கும் விவகாரங்களை தொடர்ந்து ஏன் செய்கிறார்கள்? இதை குழுவாக தனிப்பட்ட முறையில் செய்கிறார்கள். இவர்களின் இந்த நடவடிக்கை வழிபாடு நடத்துவதற்கான இடம் தொடர்பான சட்டங்களுக்கு எதிரானது.”
“நீங்கள் தான் கலவரத்தை தூண்டிவிட்டீர்கள் என பாஜகவும், முதல்வர் யோகி ஆதித்தியநாத்தும் தனிப்பட்ட முறையில் உங்களை இந்த விஷயத்தில் குற்றம் சுமத்துகிறார்களே?”
“அவர்கள் என்னை குற்றம் சுமத்தினார்கள் என்றால் நானும் அவர்களை குற்றம் சாட்டுகிறேன். அங்கு ஏற்கனவே மசூதி இருக்கிறது. சம்பலில் இந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். தீ வைப்பு சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. வெறுப்பு பரப்புரை என்பது நடத்தப்பட்டிருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட அவமானகரமான செயல் நடத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட நாடு முன்னேற்றம் அடையவேண்டும் என்பது தான் முக்கியம். அதை தான் எல்லோரும் முன் நின்று செய்ய வேண்டும்.”
`இதில் பிரச்சனைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டும்.பிரச்னை தீர்க்கப்படவேண்டும். இதற்கான தொடர்ந்து நான் குரல்கொடுப்பேன்.’
– மேகோன்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…