குற்ற வழக்குகளில் இருந்து மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். இவரது மகன் ஹண்டர் பைடன். இதனிடையே, ஹண்டர் பைடன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஹண்டர் பைடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான விசாரணை வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சமாக 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அதேவேளை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், துப்பாக்கி வைத்திருக்க அனுமதிபெற தேவைப்படும் விண்ணப்பத்தில் பொய்யான விவரத்தை தெரிவித்ததாகவும் ஹண்டர் பைடன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதைக்கு அடிமையான ஹண்டர் பைடன் தான் போதைக்கு அடிமையானவன் அல்ல என்று துப்பாக்கி தொடர்பான விண்ணப்பத்தில் போலி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஹண்டருக்கு குறைந்தபட்சம் 16 மாதங்கள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இதனிடையே, அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், குற்ற வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தனது மகனான ஹண்டர் பைடனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய 2 வழக்குகளில் இருந்தும் ஹண்டர் பைடனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்த வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டாலும் ஹண்டர் பைடன் சிறை செல்லமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவர் அடுத்த மாதம் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாக தற்போதைய ஜனாதிபதி பைடன் தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.