பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் பார்மின்றி தவித்து வந்தார். இதனால் இவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பை சேர்க்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.
இருப்பினும் முதல் போட்டியில் லபுசாக்னே, மார்ஷ், கவாஜா, ஸ்டீவ் சுமித் மற்றும் கம்மின்ஸ் ஆகிய முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் 5 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் முகமது சிராஜ் தனக்கு முதல் போட்டியின்போது பந்து வீச்சில் கிடைத்த வெற்றிக்கு கேப்டன் பும்ரா மற்றும் பயிற்சியாளர் மோர்னே மோர்கல்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் என்னிடம், ‘நீ ஒரு போர் வீரர் போன்று இந்திய அணிக்கு விக்கெட்டுகளை பெற்றுத்தர வேண்டும். அதனால் உங்களது பந்துவீச்சை ரசித்து செயல்படுத்துங்கள்’ என்று கூறினார்.
அதேபோன்று பும்ராவும் இந்த போட்டியின்போது என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். ஓவர்களில் இடைவெளியில் விக்கெட்டை எடுத்தால் கூட கொண்டாட்டத்தில் ஓட வேண்டாம். ஏனெனில் விக்கெட் கொண்டாட்டத்தால் உங்களது பந்துவீச்சு லைன் மற்றும் லென்த் மாறும். எனவே ஒரே இடத்தில் தொடர்ந்து பந்துவீசுங்கள். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீசும்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள் என்றார்.
அதன் பிறகு நான் மிகச்சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவே ஒரு பந்துவீச்சாளராக நான் இங்கு ரசித்து பந்துவீசி வருகிறேன். நிச்சயம் இனி வரும் போட்டியிலும் எனது இந்த சிறப்பான பந்துவீச்சு தொடரும்” என்று கூறினார்.