புதுடெல்லி: சம்பல் வன்முறைச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். வன்முறை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மக்களவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பேசும்போது, “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சகோதரத்துவத்திற்கு சம்பல் பெயர் பெற்றது. என்றாலும் முன்கூட்டியே திட்டமிட்டப்பட்ட உத்தி காரணமாக அங்கு திடீர் வன்முறை நிகழ்ந்துள்ளது. இது சம்பலில் சகோதரத்துவத்தை சீர்குலைப்பதற்கான நன்கு திட்டமிட்டப்பட்ட சதியாகும்.
இந்த அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோண்டுவதை பற்றிதான் பேசி வருகின்றன. இது வட இந்திய மத்திய சமவெளியின் உயர் கூட்டு கலாச்சாரத்தை பாதிக்கும்” என்று அகிலேஷ் யாதவ் பேசினார்.