புதுடெல்லி,
வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “பெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இது, இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘பெஞ்சல்’ புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீட்டர் மழை பதிவானது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.
இந்நிலையில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய அழிவுகளால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெங்கால் புயல் ஏற்படுத்திய அழிவுகளால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், பெரும் இழப்பை எதிர்கொள்பவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதில் நிர்வாகத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.