நாடாளுமன்றத்தில் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பிய இண்டியா கூட்டணி!

புதுடெல்லி: மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் மக்களவையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிநடப்பு செய்தனர்.

கடந்த நவம்பர் 25-ம் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் நிலவரம் ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரண்டு அவைகளிலும் அலுவல் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆறாவது நாளான திங்கள்கிழமை, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன் பயனாக, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தை மக்களவையில் டிசம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும், மாநிலங்களவையில் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளிலும் நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த நாளே அதானி விவகாரத்தை எழுப்பி மக்களவையிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிநடப்பு செய்து நாடாளுமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், மக்களவையில் மூன்று மற்றும் நான்காவது பெரிய கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இந்த போரட்டத்தில் பங்கேற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.