சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில் இயக்கம் தடைப்பட்டது. இதனால், 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இப்புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழை காரணமாக, விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேவும், திருக்கோவிலூர் – தண்டரை இடையேவும் ரயில்வே பாலத்தில் மழை நீர் அளவு அபாய கட்டத்தை எட்டியது.
இதன் காரணமாக, இதன் வழியாக ரயில்கள் இயக்குவது நேற்று அதிகாலையில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனால், 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்னையை வந்தடைந்த 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
முழுமையாக ரத்து: இதற்கிடையில், நேற்று காலை சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20627), எழும்பூர் – மதுரைக்கு இயக்கப்பட வேண்டிய தேஜஸ் விரைவு ரயில் (22671), எழும்பூர் – புதுச்சேரிக்கு இயக்கப்பட வேண்டிய மெமு விரைவு ரயில் (06025), எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயில் (22675), விழுப்புரம் – தாம்பரம் மெமு பாசஞ்சர் ரயில் (06028), புதுச்சேரி – எழும்பூர் விரைவு ரயில் (16116) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
சென்னை – எழும்பூர் – குருவாயூருக்கு நேற்று காலை 9.45 மணிக்கு இயக்கப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127), சென்னை எழும்பூர் – மதுரைக்கு புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில், காரைக்குடிக்கு புறப்பட வேண்டிய பல்லவன் விரைவு ரயில் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
திருப்பி விடப்பட்ட ரயில்கள்: நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் – சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட உழவன் விரைவு ரயில் (16866), மன்னார்குடி – சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட மன்னை விரைவு ரயில் (16180) ஆகிய ரயில்கள் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும், இந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக முறையே பகல் 11.45, பகல் 12.40 மணியளவில் வந்தடைந்தன.
கன்னியாகுமரி – எழும்பூருக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட விரைவு ரயில் (12634), மதுரை – சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் விரைவு ரயில் (12638), திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட நெல்லை, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்கள் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. மொத்தம் 11 விரைவு ரயில்கள் விழுப்புரம், காட்பாடி, வழியாக திருப்பிவிடப்பட்டன. இந்த ரயில் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தன.
தென், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 13 விரைவு ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 7 விரைவு ரயில்கள் வரும் வழியில் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. ரயில் சேவை பாதிப்பால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதற்கிடையில், விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் மழை நீர் அளவு குறைந்து வருவதால், அங்கு சோதனை ஓட்டம் நடத்தி, மீண்டும் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பாதை வழியாக குறைந்த வேகத்தில் விரைவு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.