சூதுகவ்வும் 2 படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பாடல்களுக்கும் ஹரி எஸ்.ஆர் பின்னனி இசையும் இசையமைத்துள்ளனர்.
2013ம் ஆண்டு நலன் குமாராசாமி இயக்கத்தில் சூதுகவ்வும் படத்தின் முதல் பாகம் வெளியானது. விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், ஷில்பா ஷெட்டி நடித்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பரவலாக பேசப்பட்டார்.
சூதுகவ்வும் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் சந்தோஷ். பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சி.வி.குமார் ஆகியோர் மேசையில் நிற்க, தன்னுடைய ஆரம்பகால நாள்கள் குறித்த நினைவுகளைப் பேசத்தொடங்கினார் சந்தோஷ் ( Santhosh Narayanan ).
“நான் அட்டகத்தி பண்றதுக்கு முன்னாடி என்னைத் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தி என் மியூசிக்கை காட்டி எப்படியாவது எனக்கு ஒரு படம் கிடச்சிடணும்னு என் கூட இருந்தவருதான் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா.
நாங்க அவர் டீம் கூட கிரிக்கெட் விளையாடிருக்கோம். அது ஒரு பேச்சுப் போட்டி மாதிரிதான். நல்லா வாய் பேசுற டீம் ஜெயிச்சிரும். அவங்கதான் ஜெயிப்பாங்க. நல்லா ஏமாத்துவாங்க.” என கலகலப்பாக பேசத்தொடங்கினார்.
ஆறுதல் சொன்ன சிவா
“அந்த நேரத்துல நான் ரொம்ப டௌன்னா இருப்பேன். பைப்போலார் மாதிரி இருக்கும். வாய்ப்புகள் கிடைக்கல, முதல் படம் நல்லதா பண்ணணும் நினைச்சேன். அவர்தான் எனக்கு ஆறுதல் சொல்லுவார். என் வீட்டுல அப்பா, அம்மா கிட்ட ‘இவன் நல்ல மனசுக்கு அவனுக்கு நல்லதே நடக்கும்’ன்னு எல்லாம் சொல்லி காமடி பண்ணுவார்.” எனக் கூறி சிரித்தார்.
“ரொம்ப நன்றி சிவா, அந்த நேரத்தில எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையது. நல்லா சாப்பிட்டுட்டு, எல்லா படத்தையும் கலாய்ச்சு குறை சொல்லிட்டு, நாங்கதான் பெஸ்ட்னு சொல்லிகிட்டு அந்த மோட்ல இருப்போம்.” என்றவர் தனக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போன தமிழ் படம் வாய்ப்பு குறித்துப் பேசினார்.
மிஸ் பண்ணின 60 படங்கள்
“தமிழ் படம்தான் என்னுடைய முதல் படமா இருக்கவேண்டியது. என் மியூசிக் நல்லா இல்ல, வேற மாதிரி வேணும்னு என்ன அனுப்பிட்டாங்க. கண்டிப்பா நான் வரவே மாட்டன்னு நிறையபேர் நினைச்சாங்க. ஏன்னா, அட்டகத்திக்கு நான் பண்ணியிருக்க வேண்டிய படம் மட்டும் ஒரு 60 படத்துக்கு மேல இருக்கும். அதுல டாப்ல இருந்தது தமிழ் படம்.
மொக்கை படங்கள் பண்ணினேன்
“அதுக்கப்புறம் அட்டகத்தி, ரஞ்சித்துகு என்னுடைய மியூசிக் பிடிக்கல, நான் எலக்ரானிக் மியூசிக் பண்ணிட்டு இருந்தேன், ரஞ்சித் தான் என்னை வீட்டவிட்டு வெளிய வரவச்சு நாட்டுப்புற இசையைக் கேட்க வைச்சாரு. என்னுடைய கலையை உருவாக்குனதுல அவர்களுடைய பங்கு அதிகம்.
அட்டகத்தி டைம்ல நானும் ரஞ்சித்தும் என்ன பேசியிருக்கோம்னு ஃபேஸ்புக்கில பாத்தேன். கேவலமா இருந்தது. ‘எப்படியாவது நாம நல்லா வந்திருவோம், ஸ்டூடியோ கிரீன் இஸ் த கிரேட் கம்பனி” அப்படி இப்படின்னு மொக்கையா பேசியிருந்தோம். இதெல்லாமும் நான் ரொம்ப முக்கியமான தருணங்களா பாக்குறேன்.
என்னுடைய முதல் 3 படங்கள் இந்த இயக்குநர்களோட (ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி) அமைந்ததுக்கு நான் சந்தோஷப்படுறேன். இவங்களோட படம் பண்ணி எனக்கு திமிறாயிடுச்சு. அதுக்கு அப்புறம் மொக்கையான படங்கள் பண்ணினேன். ‘நீ முதல்ல பாடுறத நிறுத்து’ன்னு சொல்ற நிலைமைக்கு போயிட்டே.” என்றவர் தன் தொடக்க காலத்தில் பணியாற்றிய இயக்குநர்களுடனே மீண்டும் இணைய விரும்புவதாக பேசினார்.
ரஞ்சித்துக்கு இனி நான்தான்
“சூது கவ்வும் படத்தை எப்போ பாக்க ஆரம்பிச்சாலும் கடைசிவர பாத்து முடிப்போம். சில படங்கள்தான் அப்படி ஒரு வைப் கொடுக்கும். எனக்கு சூது கவ்வுமும் கடைசி விவசாயியும் அப்படி.
நலனுக்கு நான் அடுத்து படம் பண்றேன். இன்னும் 7 மாசத்தில ஆடியோ லான்ச். நீங்க ஸ்க்ரிப்ட் எழுதுங்க எதாவது பண்ணுங்க, நான் பாட்டு ரிலீஸ் பண்ணிடுவேன்.” என்று சிரித்தார். அதே ஃப்லோவில், “ரஞ்சித்துக்கு எல்லாரையும் இடிச்சு தள்ளிட்டு இனி நான்தான் பண்ணுவேன். யாரையும் உள்ள விடமாட்டேன். இது ஒரு கட்டளை.” என அன்புக் கட்டளை வைத்தார், சிரித்தபடியே ரஞ்சித்தும் தலையசைத்தார்.
“இந்த ஆடியோ லான்ச்ல லைவ் பர்பாமன்ஸ் பண்ணுனாங்க. இப்பல்லாம் பாட்ட போட்டுட்டு பர்பாமன்ஸ் பண்ற மாதிரி நடிக்கிறதுதான். ஆனா இவங்க லைவா பாடினாங்க. சூப்பர்.” என சூது கவ்வும் 2 இசையமைப்பாளர்களை வாழ்த்தியவர், தன் பேச்சை எடிட் செய்து வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.