சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
நூலகத் துறை சார்பில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு 3-ம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (டிச.4) நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அதே நேரம் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. அதிக பாதிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.
மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்ததும் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று அவர் கூறினார்.