இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளியோம் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளிப்பதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து, புதிய சட்டம் கொண்டு வரப்படும் அல்லது அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதன் பின்னணியிலான காரணங்கள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார்.

இந்த நாடு மீண்டும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்;

“கடந்த சில நாட்களாக வடக்கில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் உருவாக்கப்படுகின்றன. அது தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடானது, யாராக இருந்தாலும் தனது இறந்த உறவுகளை நினைவு கூறும் உரிமையை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் ஏதேனும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடி, இலட்சினை போன்றவற்றை வெளியிட்டு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆயினும், கடந்த சில நாட்களாக வடக்கில் நடத்தப்பட்டதாக நம்பவைத்து, மக்களைக் குழப்பமடையச் செய்து, சில திரிபு படுத்தப்பட்ட வெளியீடுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும், அவற்றில் பல புகைப்படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளின் புகைப்படங்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவு படுத்தினார்.

அவ்வாறான புகைப்படங்கள் வெளிநாடுகளில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளின் புகைப்படங்கள் என சுட்டிக்காட்டிய அமைச்சர், சமூக ஊடகங்களில் செயற்படும் சில ஒழுங்குபடுத்தப்பட்ட நபர்கள் இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்காக இவற்றை வெளியிட்டு, சமூகங்களுக்குள் பிழையான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

சில நபர்கள் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் விபரித்தார்.

அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் நபர்களே இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும், இந்த சதிகள் காரணமாக அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தாலும், ஒரு நாடு என்ற ரீதியில் எவ்வித வெற்றியும் கிடைக்காது என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.