எடுத்த சபதத்தை முடித்துக்காட்டிய மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

“நான் ஒரு பெருங்கடல், நான் மீண்டு வருவேன்” என்று அன்று எடுத்த சபதத்தை இன்று நிறைவேற்றி இருக்கிறார் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். தாக்கரேக்களின் தாக்கத்தை தாண்டி, மகாராஷ்டிர அரசியல் களத்தில் அவர் வெற்றிக் கொடி நாட்டிய பயணம் வியக்கத்தக்கது. அதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை நியமிக்க அந்தக் கட்சி தலைமை முடிவு செய்தது. இதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆட்சேபம் தெரிவித்ததால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது. டெல்லி மேலிடப் பேச்சுவார்த்தை, சில பல ‘டீல்’களுக்குப் பிறகு முதல்வர் பதவி சஸ்பென்ஸ் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகிய மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் புதன்கிழமை மும்பை விதான் பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை வசப்படுத்தி இருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் என்பதை உறுதியாக பறைசாற்றும் வகையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் முகம் தாங்கி சிரிக்கும் சுவரொட்டிகளை கடந்த சில நாட்களாகவே காண முடிந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது. மகாராஷ்டிராவில் பாஜகவினரின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கும், விருப்பத்துக்கும் பாத்திரமாக இருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸ் யார்… இந்த வெற்றிச் சாதனையை அவர் சாத்தியமாக்கியது எப்படி என்பதை அறிந்துகொள்ள நாம் மாநிலத்தின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நடுத்த வர்க்க குடும்பத்தில் கடந்த 1970 ஜூலை 22-ல் தேவேந்திர ஃபட்னாவிஸ் பிறந்தார். தந்தை கங்காதர் பட்னாவிஸ், சட்ட மேலவை உறுப்பினர், ஜனசங்கத்துடன் தொடர்புடையவர். தாயார் பெயர் சரிதா ஃபட்னாவிஸ்.

நாக்பூரின் பூர்விகமும், குடும்பப் பின்னணியும் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு இயல்பிலேயே ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது. மாணவப் பருவத்திலேயே அவர் ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிக்‌ஷத்தில் உறுப்பினராக இருந்தார்.

ஃபட்னாவிஸின் அரசியல் நுழைவு என்பது அவர் 1992-ம் ஆண்டு நாக்பூர் நகராட்சி உறுப்பினராக தேர்வானதில் இருந்து தொடங்கியது. அவர் அந்தப் பதவியில் இரண்டு முறை இருந்தார். பின்னர், தனது 27 வயதில் நாக்பூரின் மிகவும் இளம் வயது மேயராக தேர்வானார். நகராட்சி கவுன்சிலரில் இருந்து மாநில முதல்வர் வரை தேவேந்திர ஃபட்னாவிஸ் மிக வேகமாக அரசியல் வெற்றிகளை அடைந்தார்.

இந்தப் பயணத்தில் நாட்டின் இரண்டாவது இளம் வயது மேயர், மகாராஷ்டிராவின் இரண்டாவது இளம் வயது முதல்வர், மாநில வரலாற்றில் முதல்வராக ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஆட்சியில் இருந்த இருவரில் ஒருவர் என சில பல சாதனைகளையும் தனதாக்கி வைத்திருக்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற ஃபட்னாவிஸ் 2019-ம் ஆண்டு நவம்பர் 12 வரை முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தார். அப்போது, மகாராஷ்டிராவின் தண்ணீர் பற்றாக்குறைக்கு விடைதேடும் வகையில், ஜல்யுக்தா ஷிவார் அபியானை அறிமுகம் செய்தது, நாட்டின் பொருளாதார தலைநகரை சர்வதேச நிதி மையமாக மாற்றும் வகையில் ‘மும்பை நெக்ஸ்ட்’ என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது, மகாராஷ்டிராவில் பல டிஜிட்டல் புதுமைகளை முன்னெடுத்தது, ஆதரவற்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது போன்ற திட்டங்களால் கவனம் ஈர்த்தார்.

இந்தப் பின்னணியில் 2019-ம் ஆண்டு பேரவைத் தேர்தலை ஒருங்கிணைந்த சிவசேனாவுடன் இணைந்து சந்தித்த ஃபட்னாவிஸ், அந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தும், உத்தவ் தாக்கரேவுடன் இணங்கி ஆட்சி அமைப்பதில் தோல்வியடைந்ததால், எதிர்க்கட்சித் தலைவராக பேரவையில் அமர்ந்தார் ஃபட்னாவிஸ். அப்போது அவர், “எனது நிலத்தில் நீர் பின்வாங்கிவிட்டதென எனது கரைகளில் கூடாரமிடாதே, நான் பெருங்கடல், நான் மீண்டு வருவேன்” என்று சபதம் செய்திருந்தார். இப்போது அந்த சபதத்தை வென்று காட்டியிருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மராத்திய அடையாளத்தை தூக்கிப் பிடிக்கும் மகாராஷ்டிராவில், பிரமாண அடையாளம், ஆர்எஸ்எஸ் பின்புலம் என ஃபட்னாவிஸ் மீது எதிர்க்கட்சிகள் பல வண்ணங்கள் பூசின. என்றாலும் மகாராஷ்டிராவில் பாஜக வேரூன்ற தடையாய் இருப்பது காங்கிரஸ் இல்லை, பிராந்தியக் கட்சிகளே என்ற பாஜகவின் புரிதலை மிகச் சரியாக உள்வாங்கி செயல்பட்டார் ஃபட்னாவிஸ்.

பாஜக மகாராஷ்டிராவில் பிளவுவாத அரசியலை முன்னெடுக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிளவுகளை மிகச் சரியாக பயன்படுத்தி, தட்டிக் கொடுத்தும், விட்டுக் கொடுத்தும் தேர்ந்த அரசியல் நகர்வுகளை ஃபட்னாவிஸ் முன்னெடுத்தார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணியின் அதிர்ச்சி தோல்விக்கு பொறுப்பேற்க முன்வந்து, தன்னைத் தேர்ந்த தலைவராக முன்னிறுத்திய தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மகாராஷ்டிராவில் இந்துத்துவா அரசியலின் தனித்த அடையாளமாக முன்னிறுத்தி இருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இங்கே இன்னுமொரு குட்டி ஃப்ளாஷ் பேக்… 2000-களின் தொடக்கத்தில், மத்தியில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் சிவசேனாவின் கீழ் இருக்க ஒப்புக்கொண்து ஏன் என அப்போதை மாநில பாஜகவின் மூத்த தலைவர் பிரமோத் மகாஜனிடம் கேட்டபோது, அவர் சொன்னார்…

“அரசியலில் நீங்கள் உங்களின் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்தியில் (அப்போது) வாஜ்பாய் மிகப் பெரிய தலைவராக இருக்கலாம். ஆனால், மகாராஷ்டிராவில் எங்களுக்கு (பாஜக) பாலசாகேப் தாக்கரேக்கள் தேவை. ஒருநாள் எங்களுக்கு சிவசேனா தேவைப்படாமல் போகலாம். அன்று நாங்கள் எங்களின் ஆட்டத்தை ஆடுவோம்” என்றார். அந்த வார்த்தைகளை இருபதாண்டுகளுக்குப் பிறகு சாத்தியமாக்கியதில் முக்கியமானவர்தான் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.