நியூயார்க்,
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மனஸ்சாஸ் பார்க் பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் பட் (வயது 33). இவருடைய மனைவி மம்தா காப்லே பட் (வயது 28). நேபாள நாட்டை சேர்ந்த இவர் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 29-ந்தேதி மம்தா காணாமல் போய் விட்டார்.
ஆனால், அதுபற்றி கவலைப்படாத நரேஷ், போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, கூகுளில் மறுதிருமணம் செய்வது பற்றி தேடியுள்ளார். மனைவி மரணம் அடைந்து விட்டால் கடன் என்னவாகும்? மனைவி காணாமல் போய் விட்டால் என்ன நடக்கும்? என்றெல்லாம் தேடியிருக்கிறார். மனைவி காணாமல் போய் விட்டார் என கூறப்படும் நாட்களில் இருந்து சில நாட்களாக சந்தேகத்திற்குரிய பல நடவடிக்கைகளில் நரேஷ் ஈடுபட்டு உள்ளார்.
அவர் கடைக்கு சென்று கத்திகளை வாங்கியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் இருவரும் பிரிவதற்கான முயற்சியில் இருக்கிறோம் என கூறியுள்ளார். மம்தா உயிருடன் இருக்கிறார் என கோர்ட்டில் நரேஷின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், மரபணு சான்றின்படி அவர்களுடைய வீட்டில் மம்தாவின் ரத்தம் கிடைத்துள்ளது. இதனால், அவர் கொல்லப்பட்டு, உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவருடைய உடல் கிடைக்காவிட்டாலும் இந்த சான்றுகள் வழக்கிற்கு வலு சேர்க்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி நரேஷின் வீட்டில் சோதனையிட்ட பின்னர் அவரை கைது செய்தனர். மனைவி வேலைக்கு வராத நிலையில், நிறுவனத்தினர் அதனை போலீசிடம் தெரிவித்து விசாரணை நடந்துள்ளது. ஆனால், மனைவி காணாமல் போனது பற்றி நரேஷ் போலீசில் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நரேஷ் விசாரணை காவலில் உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.