ஜெர்மனியின் முதல் பெண் அதிபரும், ஜெர்மன் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது அதிபர் என்ற பெருமைக்கும் உரியவர் ஏஞ்சலா மெர்க்கல். இவர் எழுதியுள்ள சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்து மோடியிடம் கவலை தெரிவித்ததாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் ‘இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை’ என்ற கூற்றைப் பிரதமர் மோடி மறுத்திருந்த நிலையில், அதில் தனக்குக் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்ட Freedom: memoris 1954 – 2021 என்ற 600 பக்க சுயசரிதையில் தன்னுடைய பதவிக் காலத்தில் 2005 – 2021 ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியப் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி உடனான சந்திப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் இந்தியாவின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் எழுதிய புத்தகத்தில் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து, “மோடி பதவியேற்ற பிறகு, இந்து தேசியவாதிகளால் மற்ற மதத்தினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிவந்த அறிக்கைகளைக் கவலையுடன் கண்காணித்தேன். மேலும் இதனை மோடியிடம் முன் வைத்தபோது, மோடி இதனை வலுவாக மறுத்து, ‘இந்தியா மத சகிப்புத்தன்மையோடு’ இருப்பதாகவும், `தொடர்ந்து அவ்வாறே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக” குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவருடைய பதிலை ஏற்க முடியவில்லை எனவும் புள்ளிவிவரங்களும், ஆய்வுகளும் மோடியின் கருத்துக்கு மாறாக உள்ளன என மெர்க்கல் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். “இதனை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. துரதிஷ்டவசமாக உண்மைகள் இதற்கு வேறுவிதமாக இருந்தன, எனது கவலைகள் அப்படியே தொடர்ந்தன, எல்லாவற்றிற்கும் மேலாக மத சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும்” என உலக தலைவர்களுடனான தனது சந்திப்புகள் குறித்த ‘serving Germany’ என்ற அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.
மெர்க்கல் மன்மோகன் சிங் உடனான தனது சந்திப்புகளைப் பற்றி, “இந்தியாவின் கலாசார மற்றும் மொழி வேறுபாடுகள் குறித்து சிங் என்னிடம் கூறியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்செயலாக, இந்தியாவுக்கான ஜெர்மனியின் முன்னாள் தூதர் மற்றும் இசைக்கலைஞர் வால்டர் லிண்ட்னர் இந்தியா குறித்து எழுதிய புத்தகத்திலும், இந்தியாவின் வகுப்புவாத பிரிவினை குறித்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் ஊடகங்கள், இந்தியா சிறுபான்மையினர் மீது எத்தகைய பார்வையைக் கொண்டுள்ளது? எனவும் இந்தியா இந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? என தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு, “பல குழுக்கள் மோடி அரசின் ஆதரவோடு லவ் ஜிகாத், பசுவதை எதிர்ப்பு போராட்டங்கள், சிறுபான்மையினர் மீதான குற்றச்சாட்டு போன்ற பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மோடி அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்த தவறியுள்ளது” என தன்னுடைய பார்வையைத் தெரிவித்ததாக லிண்ட்னர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் கருத்தும் ஜெர்மனி முன்னாள் அதிபரின் கருத்தும் ஒத்துப்போகின்றது. லிண்ட்னர், டெல்லியிலிருந்த 2019 முதல் ஆண்டு 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் வளர்ச்சி மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பின் ரஷ்யா உடனான நட்பு போன்றவற்றை நுண்ணியமாக கவனித்துப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தலைப்பின் கீழ் லிண்ட்னர் இந்தியாவுக்கு முதன் முதலாக 1970களில் வந்தபோது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள் குறித்து கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.