புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சம்பலைப் போன்றே, பதான்யூ மசூதி மீதும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவன் கோயில் மீது இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, இந்து மகா சபாவினரின் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்குக்குப் பின் அவரது மருமகனான ஷம்ஸி இல்துமிஷ் என்பவர் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது வட மாநில பகுதிகளில் முஸ்லிம்களுக்கான மசூதி அதிகம் இல்லை. இதனால், தற்போதைய உத்தரப் பிரதேசத்தின் பதான்யூவில் ஒரு பிரம்மாண்டமான ஜாமா மசூதியை 1225-ல் கட்டியிருந்தார். ஒரே சமயத்தில் 23,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்படிருந்த அந்த மசூதி, ஷம்ஸி ஜாமா மசூதி என அழைக்கப்படுகிறது. நாட்டின் மூன்றாவது பழமையான இந்த ஷம்ஸி ஜாமா மசூதி, இந்திய பொல்பொருள் ஆயவகப் பராமரிப்பின் கீழ் உள்ளது.
நாட்டின் ஏழாவது பெரிய மசூதியாக இந்த ஷம்ஸி கருதப்படுகிறது. பதான்யூ மசூதி முஸ்லிம்கள் வாழும் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வகம் (ஏஎஸ்ஐ) பராமரிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது. பதான்யூ நகரின் முக்கியப் பகுதியில் அமைந்த இம்மசூதியில் ஐந்துவேளை தொழுகை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்து கடவுளான சிவனுக்காக நீலகண்டன் மகாதேவ் பெயரில் இருந்த கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதை இடித்து மீண்டும் அங்கு நீலகண்டன் கோயில் கட்டவேண்டும் என ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதான்யூ ஷெஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் கடந்த 2022-ல் இந்த வழக்கை இந்து மகா சபாவின் உ.பி. நிர்வாகியான முகேஷ் பட்டேல் தாக்கல் செய்தார். களஆய்வு நடத்தவும் அதுவரை மசூதியின் அடியில் பூஜைகள் நடத்தவும் அவர் அனுமதி கோரியுள்ளார். இதற்கு ஆதாரமாக பழமையான ஒரு நூலின் குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படாத இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி அமீத் குமார்சிங், டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வழக்கின் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞரான அஸ்ரார் அகமது கூறும்போது, ‘இந்த மசூதி மீது வழக்கு தொடுக்க அடிப்படை ஆதாரங்கள் இந்து தரப்பில் இல்லை. முறையான எந்த ஆதாரங்களும் இன்றி, இவ்வழக்கை தொடுத்தவர்களுக்கு அதற்கான சட்டப்படியான தகுதியும் இல்லை. விசாரணை அனுமதிக்கான வாதங்கள் கடந்த 2022 முதல் தொடர்ந்து வருகிறது. வரும் டிசம்பர் 10-ம் தேதி எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக வைக்க வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி இதை விசாரணைக்கு ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை’ எனத் தெரிவித்தார்.
சம்பலின் ஜாமா மசூதியில் நவம்பர் 24-ல் நடைபெற்ற களஆய்வுக்கு பின் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள காஜா மொய்னுத்தீன் சிஷ்தி தர்கா மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் முன்பாக பதான்யூ மசூதி மீது தொடுக்கப்பட்ட வழக்கும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பதான்யூவில் உ.பி. காவல் துறை சார்பில் சில பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பதான்யூ மசூதியை சுற்றிலும் சிசிடிவி கேமிராக்கள் புதிதாகப் பொருத்தப்படுகின்றன. டிரோன்களில் கேமிராக்கள் மூலமாகவும் சில காட்சிப் பதிவுகள் திரட்டப்பட்டுள்ளன.
இதில் வீடுகளின் மேல்புறம் சந்தேகத்துக்கு இடமாக உள்ளவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சில வீடுகளின் கூரைகள் மற்றும் மாடி வீடுகளின் மேற்புறம் கற்களும், செங்கல்களும் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதான்யூ நகரின் இந்து மற்றும் முஸ்லிம்கள் தரப்பின் முக்கியஸ்தர்கள் உடன் அமைதி கமிட்டி கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இங்குள்ள மசூதியின் பெயரால் நகரின் அமைதிக் கெடாமல் கவனமாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மசூதியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.