சென்னை: வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்து ஆன்மிக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பினர், ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வங்கதேச அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர், இந்து அமைப்பினரை போலீஸார் கைது செய்து, பேருந்துகள் மூலம் அழைத்து சென்று சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாதக்கணக்கில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறை தான், வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தேச பக்தர்களை இன்று கைது செய்திருக்கிறது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான பிஎப்ஐ-க்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறைதான், வங்க தேச இந்துக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய தேசாபிமானிகளை இன்று கைது செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக போராடுவதற்கு கூட தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்கிறது. இந்த நிலை விரைவில் மாறும்” என்று அவர் கூறினார்.