அமராவதி: ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு வழக்கில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது குற்றப் புலனாய்வு துறையின் (சிஐடி) இயக்குநராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், அம்மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு நிதியை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சஞ்சய் தற்போது ஆந்திர மாநிலத்தின் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் துறையின் இயக்குநராக உள்ளார். மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு பணியிடை நீக்கத்தைச் சந்திக்கும் நான்காவது மூத்த ஐபிஎஸ் அதிகாரி இவர். இந்தப் பணியிடை நீக்கம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அரசு ஆணையில், “புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பின்பு, 1996-வது பேட்ச்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, கடந்த ஆண்டு லேப்டாப் மற்றும் ஐபோன்கள் வாங்கியதற்காக பணம் செலுத்தும்போது, தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதன் மூலமும், மக்களின் நம்பிக்கையை மீறுவதன் மூலமும் நிதியினைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான விழிப்புணர்வு பட்டறைகளை நடத்த உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பணி ஆணைகளை வழங்கியும், ஒரு நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு ரூ.1.15 கோடி செலுத்தியுள்ளார். இந்த இரண்டு வி அண்ட் இ அறிக்கைகளை அரசு கவனமாக ஆராய்ந்த பின்பு, ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதில் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும், இவை குறித்த விசாரணை முடியும் வரை அவர், பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவருக்கு எதிராக விஜயவாடாவில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அவசரமாக கைது செய்தது, துன்புறுத்தலில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டில் டி.ஜி. ரேங்க் கொண்டவர் உட்பட மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பரில் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.