விண்ட்ஹோக்,
நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி(SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3% வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதே சமயம், தேர்தல் முடிவுகளுக்கு அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் உள்ள வேலையின்மை விகிதத்தை குறைக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நெடும்போ நந்தி தைத்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.