மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் ரூ.160 கோடி மதிப்புள்ள பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் உட்பட 8 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பாளர் சார்பில் ரூ.75 கோடியில் 18 சாலைப் பணிகளுக்கும், நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் ரூ.85 கோடியில் 31 சாலைப் பணிகளுக்கும் பேக்கேஜ் டெண்டர் முறையில் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 50 முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். பேக்கேஜ் முறையால் டெண்டரில் 10 ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சூழல் உள்ளது.
இதனால் போட்டிகள் இல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வேலைகள் விரைவில் முடியாது. தரமாகவும் இருக்காது. பொதுப் பணித்துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை 2021-ல் ரத்து செய்யப்பட்டது. பேக்கேஜ் டெண்டரால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 ஆயிரம் கூடுதல் செலவாகும். இருப்பினும் நெடுஞ்சாலைத் துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்வது துரதிர்ஷ்டவசமானது. எனவே நெடுஞ்சாலைத்துறையில் பேக்கேஜ் டெண்டரை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்தும், அதுவரை அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், “இதுபோன்று அரசு சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விட்டால் சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் எப்படி முன்னேற முடியும்? இது போன்ற மொத்த ஒப்பந்த முறை பெரிய ஒப்பந்ததாரர்கள் மட்டும் வளர்ச்சி அடையும் வகையில் உள்ளது” என கருத்து தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.