பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?

India National Cricket Team: டெஸ்ட் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், மைதானத்தில் அதிக பார்வையாளர்களை இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பகலிரவு ஆட்டத்தில் சிவப்பு பந்துக்கு (Red Ball) பதில் இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) பயன்படுத்தப்படும். இந்த போட்டியும் 5 நாள்கள் நடைபெறும் என்றாலும் ஒருநாள் போட்டிகளை போல மதியம் தொடங்கி இரவு வரை ஆட்டம் நடைபெறும். 

இந்திய அணி இதுவரை 4 பகலிரவு ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் 2019இல் வங்கதேச அணியையும், 2021இல் இலங்கை அணியையும், 2022இல் இங்கிலாந்து அணியையும் இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுடன் மட்டுமே இந்தியா 2020ஆம் ஆண்டில் தோல்வியடைந்தது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளையும் இந்திய மண்ணில்தான் விளையாடியுள்ள, தோல்வியடைந்த போட்டியை மட்டுமே ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி விளையாடி உள்ளது.

திருப்பி அடிக்குமா இந்தியா?

அதுவும் கடந்த 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி முதல் போட்டியாகவே அடியெல்ட் ஓவல் மைதானத்தில் இந்த பகலிரவு ஆட்டத்தைதான் விளையாடியது. அந்த ஒரு போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. அதற்கு பின் அவர் தனது முதல் குழந்தை பிறப்பதையொட்டி நாடு திரும்ப இருந்தார். அந்த வகையில், அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அந்த முதல் டெஸ்ட் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. எனவே, இந்த தோல்வியின் வடுவை துடைத்தெறியவும், தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும் வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற நினைக்கும். அந்த வகையில், பகலிரவு ஆட்டங்களில் இருக்கும் பிரச்னைகள், இந்திய அணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் காத்திருக்கும் சவால்கள், அந்த சவால்களை எப்படி இந்திய அணி சமாளிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

ஆஸ்திரேலியா பகலிரவு ஆட்டத்தில் ஜித்து ஜில்லாடியாக திகழ்ந்துள்ளது. மொத்தம் 12 பகலிரவு போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்றுள்ளது. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் மட்டுமே ஆஸ்திரேலியா மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக தோல்வியை கண்டது. இந்த 12 போட்டிகளையும் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணிலேயே விளையாடி உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 7 முறை பகலிரவு போட்டிகளை விளையாடி ஆஸ்திரேலியா அனைத்திலும் வென்றுள்ளது.

இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள்

இதற்கு முக்கிய காரணம் அவர்களின் பந்துவீச்சாளர்கள்தான். அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில், ஸ்டார்க் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 39 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 28 விக்கெட்டுகளையும், நாதன் லயான் 13 இன்னிங்ஸ்களில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இதில் ஹேசில்வுட் 2வது டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார் என்றாலும் டாம் போலாண்ட் அணிக்குள் வர இருக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இளஞ்சிவுப்பு பந்து, சிவப்பு பந்தை போல் விரைவாக தேய்ந்துவிடாது. நீண்டநேரம் புதிய பந்தாகவே நீடிக்கும். இதனால், பந்து நன்கு சீம் ஆகும் வாய்ப்புள்ளது. இந்திய அணி பேட்டர்களுக்கு ஏற்கெனவே சீம் மற்றும் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. அதுவும் பகலிரவு ஆட்டங்களில் மாலை பொழுதுசாயும் வேளையில் (Twilight Timing) இளஞ்சிவப்பு பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் அந்த நேரத்தில் பேட்டிங் பிடிக்கும் பேட்டர்கள் அதனை சமாளித்து விளையாட வேண்டும். எனவே, இந்திய அணி பேட்டிங் செய்யும்போது சீம் மற்றும் ஸ்விங்கை நன்கு கணித்து விளையாடிவிட்டால் நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம். இந்தியாவிடமும் சிறப்பான பந்துவீச்சு படை இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.