சென்னை: “பத்து நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாட முற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, “உணவுப் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள், அதன் தொடர்ச்சியாக பத்தே நிமிடத்தில் மருந்து, மாத்திரைகளை டோர் டெலிவரி செய்வதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த மருத்துவ உலகையும், மருந்து நிறுனங்களையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
உயிர்காக்கும் மருந்துகளை, இப்படி படு வேகத்தில் கொண்டுவந்து கொடுக்கிறோம் என்று சொல்வது, இந்திய மருந்து சட்டங்களை மீறுவது மட்டுமல்ல, பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் இந்த செயல், தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள அவசியமான மருந்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாகும்.
மருந்தகங்களை நாடும் நுகர்வோரின் பாதுகாப்புக்காக, குறிப்பிட்ட நோயாளியின் அடையாளம், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் பட்டியல் போன்றவற்றை சரிபார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறையை இது அப்பட்டமாக மீறுகிறது. அதனால்தான், பத்து நிமிடங்களில் மருந்துகளை சப்ளை செய்கிறோம் என்று ஸ்விக்கியின் துணை நிறுவனமான இன்ஸ்டா மார்ட்டும், இ-பார்மஸி நிறுவனமான பார்ம் ஈஸியும் இணைந்து எடுத்த இந்த முடிவை அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.
அத்துடன் இந்த புதிய நடைமுறையில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் ஏற்கெனவே சில விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம் என்பதையும் அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி தனது கவலையைப் பகிர்ந்துள்ளது.
பத்து நிமிடத்தில் மருந்துகளை சப்ளை செய்யும் வேகத்தில் காலாவதியான மருந்துகளையோ, போலியான மருந்துகளையோ நோயாளிகளுக்கு கொடுக்கும் ஆபத்து இருப்பதை அரசு உணர வேண்டும். அவசியமான பாதுகாப்பு நடைமுறைகளை இந்த பத்து நிமிட டோர் டெலிவரி முறையில் நிச்சயமாக கடைபிடிக்க முடியாது. எனவே, பத்து நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாட முற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று பேசினார்.