பாகிஸ்தானில் திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட முழுதாக இல்லை. ஆனால், `பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது, ஹைபிரிட் முறையில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (BCCI) உறுதியாக இருக்கிறது.
இதனால், சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் முறையில் நடத்தப்படுமா அல்லது தொடரே வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில்தான், ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், `ஐ.சி.சி தரப்பிலிருந்து தங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும். பாகிஸ்தான் அணி இனி இந்தியாவில் விளையாடாது. இனி இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி தொடர்களில் பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகள் ஹைபிரிட் முறையில் வேறு நாட்டில் நடத்த வேண்டும்.’ என்று பாகிஸ்தான் தரப்பில் 3 நிபந்தனைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும்
ஆனால், இந்த நிபந்தனைகளை BCCI மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியானால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியும். இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், “பாகிஸ்தானில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணியை விடவும் இந்திய அணி மிகவும் விரும்புகிறது. பாகிஸ்தானில் விளையாட விராட் கோலி விரும்புகிறார்.
இங்கு பாகிஸ்தான் vs இந்தியா போட்டி நடந்தால் தொலைக்காட்சி உரிமைகள், ஸ்பான்சர்ஷிப்கள் எகிறும். ஆனால், என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியும். அரசாங்கத்தின் காரணமாகவே அவர்கள் வர மறுக்கிறார்கள்.” என்று ஊடக விவாதத்தில் கூறியிருக்கிறார். இதே சோயிப் அக்தர், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவது பா.ஜ.க கையில் இருப்பதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…