அனர்த்த சூழ்நிலையில் உயிரிழந்த உயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை ஒரு மில்லியனாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் இடம்பெற்ற அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் அவற்றை நிருவகிக்க தேசிய அனர்த்த பேரவையைக் கூட்டி அது குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும்; பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்காக தேசிய மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து அந்த செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைப்பில் தேவையான திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்து இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோருடன் இணைந்து அந்த பணிகள் முன்னெடுக்கப்படும்; என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.