நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் உடனான நட்புறவினை பயன்படுத்தி தன் போட்டி நிறுவனங்கள் மீது அரசு அதிகாரத்தை எலான் மஸ்க் துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என தான் நம்புவதாக ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என கடந்த மாதம் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் டீல்புக் மாநாட்டில் சாம் ஆல்ட்மேன், இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“எலான் மஸ்க் தனது பணியை சரியாக செய்வார் என நம்புகிறேன். சொந்த தொழில் ஆதாயத்துக்காகவும், போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளவும் அரசியல் அதிகாரத்தை அமெரிக்கர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் மஸ்க் அதை செய்யமாட்டார்” என ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராக மஸ்க் இருந்தார். இருப்பினும் அதிலிருந்து அவர் விலகிய நிலையில் லாப நோக்கமற்ற செயல்பாட்டில் இருந்து ஓபன் ஏஐ நிறுவனம் விலகியதாக சொல்லி மஸ்க் வழக்கு தொடுத்துள்ளார். எக்ஸ் ஏஐ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை மஸ்க் நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“எங்களுகுக்குள் கருத்து முரண் இருக்கலாம். ஆனாலும் அவர் அதிகம் மதிப்பளிக்கும் விஷயங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர். முன்னொரு காலத்தில் எனது ஹீரோ. வழக்கு தொடுத்தது கவலை அளிக்கும் விஷயம் தான்.
அனைவரும் எதிர்பார்க்கும் நேரத்தை காட்டிலும் முன்கூட்டியே ஆர்டிபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் (ஏஜிஐ) அறிமுகம் செய்ய உள்ளோம். இதில் பயனர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த கவலைகள் இருக்காது” என ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.