காபூல்,
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது. ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன். ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.