இலங்கையின் சுகாதார சேவையில் உலக சுகாதார அமைப்பு உட்பட பிற சர்வதேச அமைப்புகள் தற்போது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை சரியாக மதிப்பிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் அதிக உற்பத்தித்திறன் கொண்ட முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் ஆகியோருக்கிடையில் சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மக்களின் சுகாதார பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அறிவியல் துறைகளில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பல சர்வதேச அமைப்புகள் இலங்கையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தி வருவதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்ற பல சர்வதேச அமைப்புகள் இலங்கையின் சுகாதார சேவை முறையை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு இணக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.