குடிசை மாற்று வாரியம்: இடிந்து விழுந்த ஜன்னல் மேற்கூரை; அமைச்சர் கூறும் விளக்கம் என்ன!?

சென்னை பட்டினப்பாக்கம் அருகில் இருக்கும் சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததில், சையது குலாம் என்ற இளைஞர் நேற்று உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சையது குலாபின் உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் ‘மாற்று குடியிருப்பு கட்டித் தர வேண்டும்” என சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால பயன்பாட்டாலும். தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது.

தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை கொண்டு ஆய்வு செய்ததில் இக்கட்டடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய நாள்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது.

மேலும், 08.07.2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலும் 18.09.2022 அன்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் 09.09.2024 வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் மற்றும் 23.09.2024, 06.11.2024 மற்றும் 11.11.2024 ஆகிய நாள்களில் வாரிய நிர்வாகப் பொறியாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

தா.மோ.அன்பரசன்

இந்த கூட்டங்களில் குடியிருப்பை காலி செய்வதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று (04.12.2024) இரவு 134-வது பிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் சையத் குலாபுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ரூ.5. லட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில், பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த குலாப் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையில் பட்டினப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.