Harbhajan Singh News Tamil | இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தோனியுடனான உறவு குறித்து முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அவருடன் சகஜமாக பேசி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிக்கிறேன், என்னுடைய மொபைல் அழைப்புகளை எடுக்காதவர்களை எல்லாம் நான் மீண்டும் தொடர்பு கொள்வதே இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எம்எஸ் தோனி தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலக்ககோப்பை ஆகியவற்றை வெல்லும்போது அணியில் இருந்த நட்சத்திர பிளேயர் ஹர்பஜன் சிங், அவர் தோனி குறித்து தெரிவித்திருக்கும் இந்த கருத்துகள் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹர்பஜன் சிங் பேட்டி
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் யுவ்ராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா ஆகியோருடனான நட்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கேட்டபோது, நாங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறோம், அடிக்கடி பேசிக் கொள்கிறோம், எங்களுக்குள் இருக்கும் நட்பு எந்த மாற்றமும் இல்லாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது என தெரிவித்தார் ஹர்பஜன் சிங். ஆனால் தோனி குறித்த கேள்விக்கு அவர் எந்த ஒரு பதிலையும் நேரடியாக சொல்லவே இல்லை. மறைமுகமாக சில விஷயங்களை குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?
தோனி மீது விமர்சனம்
தோனி உடனான நட்பு குறித்து ஹர்பஜன் சிங் பேசும்போது, ” உங்களை மதிப்பவர்களுக்கு மட்டுமே நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களது தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்க விரும்பாதவர்களை எப்படி நீங்கள் நட்பு கொள்வீர்கள். அடிக்கடி பேசிக் கொள்ள முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது கூட நாங்கள் இருவரும் களத்துக்கு வெளியே அவ்வளவாக பேசிக் கொள்ளவே இல்லை. களத்துக்குள் மட்டும் பேசிக் கொள்வோம். போட்டி முடிந்தபிறகு ஒருநாள் கூட தோனி என்னுடன் பேசவில்லை. நானும் அவருடன் பேசவில்லை. நாங்கள் இருவரும் சகஜமாக பேசி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது” என தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங் – தோனி விரிசல் ஏன்?
2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்கள் அனைவரும் படிப்படியாக நீக்கப்பட்டனர். சேவாக் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சச்சின் டெண்டுல்கர் வலுக்கட்டாயமாக ஓய்வு அறிவிக்க வற்புறுத்தப்பட்டார். யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் இந்திய அணியில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் யாரும் இல்லை. அதாவது இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் ஒரு கேப்டனாக எம்எஸ் தோனி தன்னை நீக்கியதை எண்ணி ஹர்பஜன் சிங் கடும் கோபம் அடைந்தார். அவர் மீதான அதிருப்தியை அப்போது முதல் தொடர்ந்தார். இதனை தான் மறைமுகமாக இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
மேலும்படிக்க | IND vs AUS: அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்… இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்?