பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் | குடிநீரில் கழிவுநீர் கலப்பா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: “குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. எதனால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 2 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பின்னர், இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “22 பேருக்கு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. எதனால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குடிநீர் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான பாதிப்புதான் ஏற்பட்டிருக்கிறது குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருவர் இறந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவரும். அதோடு குடிநீர் மாதிரியும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர்கள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை கூறி வருகிறார். இதையே வாடிக்கையாகவும் கொண்டுள்ளார்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.