பிரிஸ்பேன்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட்டின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் ஹர்லீன் தியோல் (19 ரன்கள்), ஹர்மன்ப்ரீத் கவுர் (17 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23 ரன்கள்) மற்றும் ரிச்சா கோஷ் (14 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
வெறும் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 100 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மேகன் ஷட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வால் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
வெறும் 16.2 ஓவர்களிலேயே 102 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 46 ரன்களும், லொட்ச்பீல்ட் 35 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.