மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்க உள்ள நிலையில் அவருடன் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவிறே்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கூட்டணி சார்பில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பாரா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், தற்போது அவரும் அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை இன்று ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வராக பதவியேற்க உள்ள தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மற்றும் மும்பா தேவி கோயில்களுக்குச் சென்று இன்று வழிபட்டார்.
தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைனாத்தில் மாலை 5.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளார்கள். அவர்களுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் பங்கேற்க மும்பை வந்துள்ளனர். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஞ்சி, ஒடிசா துணை முதல்வர் பிராவதி பரிதா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் தாக்கூர், மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தியோரா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ளனர்.
பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கும் அன்புச் சகோதரி திட்டத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அமல்படுத்தியதே தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, பதவியேற்பு விழாவில் பெண்களைச் சிறப்பிக்கும் நோக்கில் 15,000 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசாத் மைதானத்தில் 40 ஆயிரம் பேர் அமர முடியும் என்றும் மைதானம் முழுமையாக நிரம்பும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழாவையொட்டி 4,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து ஒழுங்குமுறைக்காக, மும்பை காவல்துறையில் இருந்து ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனர் மற்றும் மூன்று துணை போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் 30 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 250 காவலர்கள் அடங்கிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.