மூன்றே மாதங்களில் கவிழ்ந்த பிரான்ஸ் அரசும், ஐரோப்பிய யூனியன் அச்சமும் – ஒரு பார்வை

பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறை. தற்போது பிரான்ஸில் நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பு, ஐரோப்பிய யூனியனையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் பின்புலம் குறித்தும், ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் பார்ப்போம்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் பிரதமர் மிஷேல் பார்னியேர் சமீபத்தில் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், அதிபர் மேக்ரோனின் ஆதரவு இருப்பதால், அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்ற மிஷேல் பார்னியேர் முயன்றார். அவரின் முயற்சியின் எதிர்விளைவால், பிரதமர் மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரதமர் மிஷேல் பார்னியர் படுதோல்வியைச் சந்தித்தார். மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில், 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், பிரதமரான மூன்றே மாதங்களில் பதவியை இழந்தார் பார்னியர். பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் ஒருவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடிச் சூழல், அந்நாட்டை பெரியதொரு அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்குள் தள்ளியிருக்கிறது. இது பிரான்ஸ் மக்களையும் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சின் அரசியல் சூழலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

பிரான்ஸின் அரசியல் கொந்தளிப்பு, அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை. அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுதான் பிரான்ஸ். முதலாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. ஜெர்மனியும் பிரான்ஸும் பாரம்பரியமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தியல் மற்றும் அரசியல் திறன்களின் மோட்டார் என்றே பார்க்கப்படுகின்றன.

இந்தப் பின்னணியில், உள்நாட்டு அரசியல் கொந்தளிப்புகளால் திசைத் திருப்பப்பட்டிருப்பது பிரான்ஸ் மட்டும் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஜெர்மனியிலும் சமீபத்தில் அதன் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, பிப்ரவரியில் அந்நாடு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மோட்டார் தற்போது சிதைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால்தான் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் கலக்கத்தில் உள்ளது.

இந்த இடத்தில் ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்… கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினார், ரஷ்ய அதிபர் புதின். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை நிலைநிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை தடுக்கவே ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்தப் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருவதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். இந்தப் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உதவி வருகின்றன.

இப்போது நிகழ்காலத்துக்குள் வருவோம். ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியங்களில் நிலவும் தற்போதையைச் சூழலில், ஆக்ரோஷமான ரஷ்யாவுக்கு எதிராக தங்களை நிலைநிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை மற்றும் வலிமையின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கும்போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜோ பைடன். தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியிருப்பவர் டொனால்டு ட்ரம்ப். அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும் உக்ரைனுக்கு அளித்து வரும் உதவிகளை குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ, உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உறுதி என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்துக்கு இணையாக பிரான்ஸ்தான் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவை பரவலாக கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு செலவீனங்கள் பற்றிய ட்ரம்ப்பின் மனக்கசப்பு என்னவாக இருக்கும், அது அரசியலில் எவ்வாறு வெடிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

புவிசார் அரசியல் களத்தில் இந்த முக்கியமான தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான தலைமை இல்லாமல் தவிக்கிறது. ரஷ்யா மீது அனுதாபம் கொண்ட தலைவர்களால் ஹங்கேரி, ஸ்லோவாகியா, ருமேனியாவில் எதேச்சதிகார சூழல் உருவாகியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் கவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டு திசைத் திருப்பப்பட்டிருப்பது அந்த ஒன்றியத்தை மாலுமியில்லாத கப்பலாக உணரச் செய்துள்ளது.

பிரான்ஸைப் பொறுத்தவரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை அரசியல் ஸ்திரத்தன்மை தெரியவில்லை. அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தியதே இந்தக் கொந்தளிப்பான நிலைக்கு காரணமாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணிக் கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கட்சிக்கு அதிபரின் ஆதரவும் கிட்டியது. இருந்தாலும் மைனாரிட்டி அரசாகத்தான் அக்கட்சி ஆட்சியமைக்க முடிந்தது.

இதனையடுத்து, பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மிஷேர் பார்னியர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன. இப்போது அவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டு விட்டது.

பிரான்ஸின் புதிய சட்டப்படி இன்னும் ஒரு வருட காலத்துக்கு பிரதமர் தேர்தலை நடத்த முடியாது. அதுவரை பார்னியர் காபந்து பிரதமராக இருக்கலாம் அல்லது அதிபர் மேக்ரோன் புதியவர் ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம். என்றாலும், அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது மூன்று பரஸ்பர எதிர் அரசியல் தொகுதிகளாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில், பிரான்ஸில் மேற்கொள்ளப்பட இருக்கும் சீர்திருத்தங்களும், புதிய பட்ஜெட்டுகளும் முடக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.

இதனிடையே, வரும் 2027-ம் ஆண்டு பிரான்ஸ் அதிபரின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், முன்கூட்டியே அதிபர் தேர்தலை மேக்ரான் நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அரசியல் புனைக்கதை என்று அதிபர் மறுத்துள்ளார்.

எனினும், அதிபர் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை இப்போது எதிர்க்கட்சிகளிடம் வலுத்து வருகின்றன. இது பிரான்ஸின் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை அதிபர் ராஜினாமா செய்தால், அங்கு அடுத்த 30 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக அடுத்து பிரான்ஸில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, அந்நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.